செய்திகள்

மெட்ரோ சுரங்க ரெயிலில் 2.82 லட்சம் பேர் பயணம்

Published On 2017-05-23 15:51 IST   |   Update On 2017-05-23 15:51:00 IST
மெட்ரோ சுரங்க ரெயிலில் கடந்த 14-ந் தேதி முதல் 9 நாட்களில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 621 பேர் பயணம் செய்து உள்ளனர். 1.23 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் விற்பனையாகி உள்ளதாகவும் மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்து உள்ளது.
சென்னை:

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக கோயம்பேடு - ஆலந்தூர், அதன் பின்னர் சின்னமலை - விமான நிலையம், அதனை தொடர்ந்து பரங்கிமலை வரை உயர்பாதையில் மெட்ரோ ரெயில் சேவை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சுரங்கப் பாதையில் முதல்கட்டமாக திருமங்கலம் - நேரு பூங்கா இடையே கடந்த 14-ந் தேதி மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இதற்கு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது. கட்டணம் அதிகமாக இருந்த போதிலும் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இதனால் ரூ.100 மதிப்புள்ள ‘ஸ்மார்ட்கார்டை’ வாங்குவதற்காக நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டி உள்ளது.

சுரங்கப்பாதை மெட்ரோ ரெயிலில் கடந்த 14-ந் தேதி முதல் 9 நாட்களில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 621 பேர் பயணம் செய்து உள்ளனர். இதை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் இன்று தெரிவித்தது.

இதேபோல் 1 லட்சத்து 23 ஆயிரத்து 827 ஸ்மார்ட் கார்டுகள் விற்பனையாகி உள்ளதாகவும் மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்து உள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கடந்த 21-ந் தேதி வரை மெட்ரோ ரெயிலில் 20 லட்சத்து 25 ஆயிரத்து 439 பயணிகள் பயணம் செய்து உள்ளனர்.

ஸ்மார்ட் கார்டு மூலம் மெட்ரோ ரெயிலில் குரூப்பாக பயணம் செய்தால் கட்டணத்தில் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட் கார்டு மூலம் நேரு பூங்காவில் இருந்து பரங்கிமலை வரை ரூ.45-ம், நேருபூங்காவில் இருந்து விமான நிலையம் வரை ரூ.54-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதேபோல அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கும் பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.


Similar News