செய்திகள்

ரஜினி அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி தான் தொடங்குவார்: திருநாவுக்கரசர்

Published On 2017-05-23 04:18 GMT   |   Update On 2017-05-23 04:18 GMT
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி தான் தொடங்குவார் என புதுக்கோட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு கடந்த பல தினங்களாக கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. பிளஸ்-1 தேர்வும் பொதுத்தேர்வு என்று கூறி இருப்பது மாணவர்களுக்கு சிரமங்களை கொடுத்தாலும், நீட் தேர்வு உள்ளிட்ட உயர் கல்வி தொடர்புடைய தேர்வுகளுக்கு இது அவசியம் என்பதால் இதனையும் வரவேற்கிறேன்.

ஆனால் பிளஸ்-1 பொதுத்தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்தால், அவர்களை மீண்டும் அதே வகுப்பில் படிக்க சொல்லாமல் பிளஸ்-2 வகுப்பில் படிக்க அனுமதித்து, பிளஸ்-2 தேர்வு முடிவடைவதற்குள் பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், என அறிவிக்க வேண்டும்.

சட்டசபையை கூட்ட வேண்டும் என்று தற்போது தான் 8 எம்.எல்.ஏ.க்கள் கூறி வருகிறார்கள். ஆனால் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பல மாதங்களாக இதை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

தற்போதுள்ள சூழ்நிலையில், சட்டமன்றத்தை கூட்டினால் தான் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். தமிழக விவசாயிகள், தங்களுடைய பிரச்சனைகளுக்காக ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்க வேண்டும் என கூறுவது முறையற்ற கோரிக்கை.



நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், அவர் மாநில கட்சிகளுடனோ அல்லது தேசிய கட்சிகளுடனோ இணைய மாட்டார். அவர் தனிக்கட்சி தான் தொடங்குவார்.

தமிழகத்தில் யார் மூலம் பா.ஜ.க. வளர முடியும் என்று நினைத்தே அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் ரஜினிகாந்தை அழைக்கின்றனர். முதலில் அவர் அரசியல் கட்சி தொடங்கட்டும். அதன் பிறகு காங்கிரஸ் கட்சி அவரை கூட்டணிக்கு அழைக்குமா என்று முடிவு செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News