செய்திகள்

தற்கொலை செய்த பெண் உடல் வீச்சு: டாஸ்மாக் ஊழியர் கைது

Published On 2017-05-20 20:01 IST   |   Update On 2017-05-20 20:01:00 IST
சிவகங்கை மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை உறவினர்கள் வீட்டின் முன் வீசியது தொடர்பாக டாஸ்மாக் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், திருவேகம்புத்தூர் அருகே உள்ள ஆந்தக்குடியை சேர்ந்தவர் ஜான்சன் ஜார்ஜ். இவரது மனைவி ஆரோக்கியமேரி (வயது 42). இவர் அதே ஊரில் குழந்தைகள் நல காப்பகத்தில் அமைப்பாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த கடந்த 17-ந் தேதி ஆரோக்கி மேரியின் பிணத்தை காளையார்கோவில் அருகே உள்ள இலந்தைகுடியில் உள்ள அவரது சகோதரி வீட்டு முன்பு மர்ம கும்பல் வீசிச் சென்றது.

இதுகுறித்து காளையார் கோவில் போலீசார், வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியமேரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி. மங்களேஸ்வரன், காளையார் கோவில் இன்ஸ்பெக்டர் கல்யாண குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில், ஆரோக்கிய மேரிக்கும், இலந்தைக்குடி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்து வந்துள்ளது. சிவக்குமார் காரைக்குடியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார். சிவக்குமாருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சிவக்குமாரின் மனைவி குழந்தையுடன் ஊருக்கு சென்று உள்ளார். இதை அறிந்த ஆரோக்கியமேரி சம்பவத்தன்று காரைக் குடியில் உள்ள சிவக்குமார் வீட்டுக்கு சென்று உள்ளார்.

அப்போது சிவக்குமார் வாங்கி கொடுத்த நகையை, ஆரோக்கியமேரி அடகு வைத்துள்ளார். இதில் 2 பேருக்கும் பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பின்னர் சிவக்குமார் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். அப்போது வீட்டில் உள்ள தனி அறையில் ஆரோக்கியமேரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த சிவக்குமார் ஆரோக்கியமேரி இருந்த அறையின் கதவை தட்டியுள்ளார். அப்போது கதவு திறக்கவில்லை. ஆரோக்கிய மேரி தூங்கியிருக்கலாம் என்று கருதிய சிவக்குமார் வீட்டின் மற்றொரு அறையில் தூங்கினார்.

காலையில் எழுந்த சிவக்குமார் மீண்டும் கதவை தட்டியுள்ளார். கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் கதவை உடைத்து பார்த்த போது ஆரோக்கிய மேரி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் செய்வதறியாது தவித்தார். உடனே உறவினர்கள் 5 பேரை வீட்டுக்கு வரவழைத்த சிவக்குமார், ஆரோக்கிய மேரியின் உடலை, அவரது சகோதரி வீட்டு முன்பு போட்டு விட்டு சென்று உள்ளார்.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், ஆரோக்கியமேரியை தற்கொலைக்கு துண்டியதாக சிவக்குமாரை கைது செய்தனர். மற்ற 5 பேரை தேடி வருகின்றனர்.

Similar News