செய்திகள்

காரைக்குடி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி விடிய விடிய பெண்கள் போராட்டம்

Published On 2017-05-20 16:43 IST   |   Update On 2017-05-20 16:43:00 IST
காரைக்குடி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி விடிய விடிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த மித்ராவயல் கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அதனை உடனே மூட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அவர்களது கோரிக்கையை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், மாதர் சங்க மாவட்ட செயலாளர் கல்பனா தலைமையில் திரண்டனர். அவர்கள் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கண்டன கோ‌ஷம் எழுப்பிய படி மதுக்கடையை சென்றடைந்தனர். அங்கு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

தகவல் அறிந்ததும் தாசில்தார் கண்ணன் மற்றும் சாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கடையை மூடுவோம் என உறுதி அளித்தால்தான் இடத்தை காலி செய்வோம். என்று பெண்கள் கூறினர். அதிகாரிகள் உறுதி அளிக்காததால் போராட்டம் விடிய விடிய நீடித்தது. இரவு அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டனர். தொடர்ந்து போராட்டம் நீடிக்கிறது.

Similar News