அனகாபுத்தூரில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
பம்மல்-அனகாபுத்தூர் பகுதியில் உள்ள சீனிவாசபுரத்தில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுக் கடை திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வந்தனர்.
இதையறிந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு மதுக்கடை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் முயற்சி மேற்கொண்டனர். சங்கர் நகர் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி அங்கு விரைந்து சென்று அதிகாரிகளை தொடர்பு கொண்டு மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார்.
நெடுஞ்சாலைக்கு அருகே 500 மீட்டர் தொலைவுக்குள் மதுக்கடை அமைக்க கூடாது என்று விதி இருப்பதாக எம்.எல்.ஏ. சுட்டிக்காட்டினார். உடனே அதிகாரிகள் கடை அமையும் இடத்தை நெடுஞ்சாலையில் இருந்து அளந்து பார்த்தனர். அப்போது 320 மீட்டர் தூரம் தான் இருந்தது தெரியவந்தது. இதனால் கடை அமைக்க முடியாமல் திரும்பி சென்றனர்.