செய்திகள்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: நெடுவாசலில் நூதன போராட்டம்

Published On 2017-05-18 19:56 IST   |   Update On 2017-05-18 19:56:00 IST
நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் 2ம் கட்ட போராட்டத்தை கடந்த 12ம் தேதி துவக்கினர்.

36வது நாளாக நடந்த போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர். அப்போது ஆண்கள் இத்திட்டத்திற்கு எதிராக இலை, தழைகளை மாலையாக கழுத்தில் மாட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதி ஆண்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில்:-

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நாங்கள் கடந்த 36 நாட்களாக 2ம் கட்டமாக போராடி வருகிறோம். எங்கள் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் இப்பகுதி பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தினால் நிலத்தடி நீர் பாழாவதுடன், காற்று மாசு பட்டு நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. அதனால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நாங்கள் இலை தழைகளை உடுத்திக் கொண்டு செல்ல வேண்டியது தான் என்பதை அரசுக்கு உணர்த்தவே இது போன்ற நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும். இல்லையேல் இத்திட்டத்திற்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தொடர்ந்து போராட்டங்களை நடத்த தயாராக உள்ளோம் என்று கூறினார்கள்.

Similar News