செய்திகள்

சிட்லபாக்கத்தில் புதிய ரூ.2000, 500 கள்ளநோட்டுடன் 2 வாலிபர்கள் கைது

Published On 2017-05-18 15:41 IST   |   Update On 2017-05-18 15:41:00 IST
சிட்லபாக்கத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதிய ரூ.2000, 500 கள்ளநோட்டுடன் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம்:

சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாக பணியாற்றும் ராமதுரை, சதீஷ் ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலையில் சென்றபோது சந்தேகத்திற்கிடமாக நின்ற 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது 5 ஆயிரத்து 500 மதிப்பில் புதிய ரூ.2 ஆயிரம், ரூ.500 கள்ள நோட்டுகள் இருந்தது.

மேலும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் ரூ.6 ஆயிரம் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் நாகர்கேனி பகுதியை சேர்ந்த யூசுப், சுல்தான் என்பது தெரிந்தது.

அவர்களுக்கு புதிய ரூ.2 ஆயிரம், ரூ.500 கள்ள நோட்டுகள் கிடைத்தது எப்படி? இதுவரை எவ்வளவு கள்ள நோட்டுகளை எங்கெல்லாம் புழக்கத்தில் விட்டு உள்ளனர்? வடமாநில கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

புதிய ரூ.2 ஆயிரம், ரூ.500 கள்ள நோட்டுகளுடன் 2 வாலிபர்கள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News