செய்திகள்

வேதாரண்யம் அருகே படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் மீட்பு

Published On 2017-05-16 17:40 IST   |   Update On 2017-05-16 17:40:00 IST
வேதாரண்யம் அருகே மீன் பிடிக்க சென்ற படகு கவிழ்ந்தது.கடலில் தத்தளித்த 3 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
வேதாரண்யம்:

ஆண்டு தோறும் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக 48 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில்லை. இதனால் பைபர் படகு மீனவர்கள் கடலில் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

வேதாரண்யம் ஆறு காட்டுத்துறை பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன் (வயது 29), இவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத் (20), டெனி (25) 3 பேர் இன்று அதிகாலை 3 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்களுடன் மற்ற மீனவர்களும் அவர்களது படகுகளில் மீன்பிடிக்க சென்றனர்.

இந்நிலையில் அருள் முருகன் மீன்பிடித்துக்கொண்டிருந்த பகுதியில் கடலின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. அப்போது  கடலின் அலைகள் வேகமாக படகின் மீது மோதியதில் படகிற்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்தது. படகில் வந்த 3 பேரும் கடலில் தத்தளித்தனர். அவர்களை அந்த வழியாக மீன்பிடிக்க வந்த சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News