செய்திகள்

காண்டிராக்டரிடம் பணம் கேட்டு மிரட்டிய போலி சி.பி.ஐ. அதிகாரி கைது

Published On 2017-05-15 17:55 IST   |   Update On 2017-05-15 17:55:00 IST
சீர்காழியில் காண்டிராக்டரிடம் பணம் கேட்டு மிரட்டிய புதுச்சேரியை சேர்ந்த போலி சி.பி.ஐ. அதிகாரி கைதானார்.
சீர்காழி:

நாகை மாவட்டம், சீர்காழி, தென்பாதி சங்கர்நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 43). இவருடைய சகோதரர் ரமேஷ்பாபு. இவர்கள் காண்டிராக்ட் தொழில் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ரமேஷ்பாபு வீட்டிற்கு வந்த மர்மநபர் ஒருவர் வீட்டில் இருந்த சீனிவாசனிடம் தான் சி.பி.ஐ. அதிகாரி என்றும், டெல்லியில் இருந்து வந்துள்ளதாகவும், ரமேஷ்பாபு மீது வந்துள்ள புகார்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். எனவே அவரை வரசொல்லுங்கள் என்று கூறியதுடன், சி.பி.ஐ. விசாரணையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் பணம் தரவேண்டும் என்று கூறி மிரட்டி உள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த சீனிவாசன், சி.பி.ஐ. அதிகாரி என கூறிய மர்ம நபரை பிடித்துக்கொண்டு சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சப்இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை செந்தாமரை நகரை சேர்ந்த கணேசன் (49) என்பதும், போலி சி.பி.ஐ. அதிகாரி என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News