செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2017-05-08 23:15 IST   |   Update On 2017-05-08 23:15:00 IST
ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, மாட்டு வண்டியில் வந்து நெடுவாசல் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் 2-வது கட்ட போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று 26-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள நெடுவாசல் பொதுமக்கள் மாட்டுவண்டியில் வந்தனர். பின்னர் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கூறுகையில், திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மீத்தேன் திட்டம் வேண்டாம் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தற்போது மக்கள் எதிர்ப்பு இல்லை என்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர் மாவட்டங்களில் எண்ணெய் கிணறு அமைக்க 21 இடங்களில் சோதனை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் தமிழக அரசும் எதிர்ப்பு காட்டவில்லை. இதே போன்று நெடுவாசலிலும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு இல்லை என்று சொல்லி தனியார் நிறுவனத்தை அனுப்பினாலும் அனுப்பலாம். அதனால் தான் திட்டம் ரத்து செய்யும் வரை போராட்டத்தை தொடருகிறோம் என்றனர்.  

Similar News