செய்திகள்
சம்பவம் நடந்த பட்டிபுலம் சவுக்கு தோப்பு - கம்ப்யூட்டர் உதவியுடன் வரையப்பட்ட குற்றவாளியின் மாதிரி வரைபடம்

ஜெர்மனி பெண் கற்பழிப்பு: குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

Published On 2017-04-04 15:55 IST   |   Update On 2017-04-04 15:55:00 IST
சுற்றுலா வந்த ஜெர்மனி பெண் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதானி தகவல் தெரிவித்தார்.
மாமல்லபுரம்:

ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஜெசீனா (35). மாமல்லபுரத்தில் உள்ள கோவில்கள், சிற்பங்களை காண வந்திருந்தார். அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த அவர் நேற்று முன்தினம் காலை கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது அவரை மர்ம நபர்கள் சிலர் வலுக்கட்டாயமாக மறைவான இடத்துக்கு தூக்கி சென்று கற்பழித்துவிட்டு தப்பி விட்டனர்.

இதுகுறித்து ஜெர்மன் பெண் மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

அப்பெண் கூறிய அங்க அடையாளங்களை வைத்து ஒரு குற்றவாளியின் மாதிரி படத்தை வெளியிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். 60-க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதானி கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் சுற்றுலா பயணி இன்று ஜெர்மனி செல்ல இருப்பதால் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜெர்மனி தூதரகத்துக்கு சட்ட ரீதியான தகவலகள் அனைத்தும் கொடுத்து விட்டோம். மருத்துவ பரிசோதனை வந்த பிறகு அடுத்த அறிக்கை அனுப்பப்படும். அவர்கள் நாட்டு போலீசாரும் தற்போது எங்களுடன் இணைந்து ஒத்துழைப்பதால் சைபர் கிரைம், தடயவியல் சாடிலைட் உதவியுடன் குற்றவாளியை நெருங்கி விட்டோம் விரைவில் பிடிபடுவான் காத்திருங்கள் என்றார்.

இதற்கிடையே கற்பழிக்கப்பட்ட பெண்ணிடம் ஜெர்மனி நாட்டு பெண் தூதரக அதிகாரிகள் 2½ மணி நேரம் நேரில் விசாரணை நடத்தி ஆறுதல் கூறினர். அவருக்கு உளவியல் பயிற்சி அளித்தனர். அப்போது அப்பெண் கதறி அழுதார்.

கடந்த மார்ச் மாதம் தனது குழந்தையை பறிகொடுத்தேன். அந்த கவலையை மறக்க இந்தியாவுக்கு சுற்றுலா வந்தேன். கோவில் நகரமான காஞ்சீபுரம் மாவட்டத்தை தேர்வு செய்து மாமல்லபுரம் வந்தேன். இங்கு இப்படி பாலியல் கொடுமையா என்று கண்ணீர்விட்டார். இதை கேட்ட தூதரக அதிகாரிகளும் கண்கலங்கினர்.

அவரிடம் குற்றவாளிகளை விரைவில் பிடித்து தண்டனை பெற்று கொடுக்கப்படும் என்று தேற்றினர்.

Similar News