செய்திகள்

மாமல்லபுரத்தில் கற்பழிக்கப்பட்ட ஜெர்மன் பெண்ணிடம் தூதரக அதிகாரிகள் விசாரணை

Published On 2017-04-03 11:47 IST   |   Update On 2017-04-04 08:47:00 IST
மாமல்லபுரத்தில் கற்பழிக்கப்பட்ட ஜெர்மன் பெண்ணிடம் தூதரக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தப்பி ஓடிய 3 பேரையும் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
மாமல்லபுரம்:

சர்வதேச சுற்றுலா தளமான மாமல்லபுரத்துக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள். தினமும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

ஜெர்மன் நாட்டில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் 15 பேர் தமிழகத்துக்கு சுற்றுலா வந்தனர். லோமன் ஜெனு (38) என்கிற இளம் பெண்ணும் அவர்களுடன் வந்திருந்தார்.

மாமல்லபுரத்தில் நீண்ட நாட்கள் தங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் லோமன் ஜேனுவும், அவருடன் வந்திருந்தவர்களும் மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்தனர்.

அங்கு 15 நாட்களாக அவர்கள், தங்கி இருக்கிறார்கள். பல இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு இரவில் மாமல்லபுரம் வந்து தங்கியுள்ளனர். திருவண்ணாமலை, ராமேஸ்வரம் காஞ்சீபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.



நேற்று மதியம் லோமன் ஜெனுவும் ஜெர்மனை சேர்ந்த 2 பெண்களும் மாமல்லபுரம் கடற்கரையில் சூரிய குளியலில் ஈடுபட திட்டமிட்டனர். இதற்காக மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே வலது புறத்தில் உள்ள காலியான இடத்துக்கு சென்றனர்.

அங்கு சூரியகுளியலில் ஈடுபட சிலர் இடையூறாக இருந்ததால் 3 பேரும் 5 கி.மீ தூரத்தில் பட்டிபுளம் கடற்கரை பகுதிக்கு நடந்து சென்றனர். பின்னர் அங்கு சூரியகுளியலில் ஈடுபட்டனர்.

லோமன் ஜெனுவும் மற்ற 2 பெண்களும் உள்ளாடைகளை மட்டும் அணிந்த நிலையில் கடற்கரை மணலில் படுத்து தனித்தனியாக சற்றுதூரத்தில் சூரிய குளியலில் ஈடுபட்டனர். அப்போது லோமன் ஜேனு அயர்ந்து தூங்கி விட்டார்.

ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்த அந்த பகுதிக்கு மர்ம நபர்கள் 3 பேர் வந்தனர். வெளிநாட்டு பெண் ஒருவர் தனியாக கடற்கரை மணலில் படுத்திருப்பதை பார்த்ததும் அவர்களது மனதில் விபரீத எண்ணம் ஏற்பட்டது. அவரை அடைய திட்டமிட்டனர்.

சூரிய குளியலில் ஈடுபட்டபடியே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த லோமன் ஜெனுவை வாயை பொத்தி குண்டு கட்டாக தூக்கி அங்கிருந்து கடத்திச்சென்றனர். அப்பகுதியில் இருந்த சவுக்குத் தோப்புக்கு அவரை கடத்திச் சென்ற 3பேரும் அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கற்பழித்தனர்.

பின்னர் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. தனக்கு நேர்ந்த இந்த கொடுமையால் லோமன் ஜெனு கடும் அதிர்ச்சி அடைந்தார். சவுக்குத் தோப்பில் இருந்து பதட்டத்துடன் வெளியேறி கடற்கரைக்கு வந்த லோமன் ஜெனு, தான் கற்பழிக்கப்பட்டது பற்றி மற்ற 2 பெண்களிடமும் கூறி கதறி அழுதார்.

பின்னர் இது பற்றி மாமல்லபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. லோமன் ஜேனு அளித்த புகாரில், இந்தியர்கள் 3 பேர் தன்னை கற்பழித்துவிட்டதாக கூறி இருந்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி வழக்கு பதிவு செய்தார். சம்பவ இடத்துக்கு லோமன் ஜெனுவை அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

சந்தேகத்துக்கிடமாக அப்பகுதியில் யாராவது சுற்றி திரிந்தார்களா? என்பது பற்றி மீனவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஜெர்மன் பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. காஞ்சீபுரம் டி.ஐ.ஜி. நஜ்மல் கோடா, போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி ஆகியோரும் உடனடியாக மாமல்லபுரத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இரவு 12 மணி வரையிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கற்பழிப்பு புகார் கூறிய லோமன் ஜெனுவுக்கு செங்கல்பட்டு, மற்றும் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த சம்பவம் பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி கூறும் போது மருத்துவ பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அது கிடைத்தவுடன் நடவடிக்கை தீவிரபடுத்தப்படும் என்றார்.

இதற்கிடையே ஜெர்மன் தூதரக அதிகாரிகளும் மாமல்லபுரம் வந்து லோமன் ஜெனுவிடம் விசாரணை மேற்கொண்டனர். தப்பி ஓடிய 3 பேரையும் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதற்கிடையே ரஞ்சித் என்ற வாலிபர் பிடிபட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதனை போலீசார் உறுதி செய்யவில்லை.

Similar News