செய்திகள்

ஊரக உள்கட்டமைப்பு திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

Published On 2017-03-19 17:11 GMT   |   Update On 2017-03-19 17:11 GMT
ஊரக உள்கட்டமைப்பு திட்டப்பணிகளை விரைந்து முடிக்க கோரி அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் 2016–17 நடப்பாண்டில் நபார்டு வங்கி மூலம் ரூ.61 கோடி அளவில் செயல்படுத்தப்படும் ஊரக உள்கட்டமைப்பு திட்டப்பணிகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் கூறியதாவது:–

நபார்டு வங்கியின் ஆர்.ஐ.டி.எப். திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கிராமம் மற்றும் நகர்ப்புற சாலை பணிகள், பாலங்கள், தடுப்பணைகள், ஆதிதிராவிட மாணவ–மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள், விவசாயிகளுக்கான பயிர் கிடங்குகள், பள்ளி வகுப்பறைகள் மற்றும் அறிவியல் சோதனைகள் செய்யும் அறைகள், கால்நடை மருத்துவமனைகள் ஆகிய பணிகளில் அந்தந்த அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அனைத்து துறை கோட்ட பொறியாளர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் நபார்டு திட்டத்தில் சுற்றுலா தலங்கள் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கும் முன்னுரிமை அளித்து அந்தந்த பணிகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் டாக்டர் பங்காருகிரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) வானதி, உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் பல துறைகள் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News