செய்திகள்

பூந்தமல்லியில் பெண்களை காரில் கடத்தி நகை பறித்த 2 பேர் கைது

Published On 2017-03-18 12:08 IST   |   Update On 2017-03-18 12:08:00 IST
பூந்தமல்லியில் பெண்களை காரில் கடத்தி நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். நகை மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்தவர் அமுதவள்ளி. இவர் தனது 2 மகள்களுடன் கடந்த 9-ந் தேதி அரக்கோணத்துக்கு செல்வதற்காக பூந்தமல்லி பைபாஸ் சாலையில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார்.

அப்போது வாடகை காரில் வந்த 2 வாலிபர்கள், அமுதவள்ளியிடம் ரூ. 150 கொடுத்தால் அரக்கோணத் தில் இறக்கி விடுகிறோம் என்று கூறினர். இதையடுத்து அமுதவள்ளி மகள்களுடன் காரில் ஏறி சென்றார். ஆனால் காரை 2 வாலிபர்களும் அரக்கோணத்துக்கு செல்லாமல் வேலூர் நோக்கி ஓட்டி சென்றனர்.

இதனால் அமுதவள்ளி கூச்சல் போட்டார் உடனே அவர்களை கத்தியை காட்டி மிரட்டினர். ஆரியம் பெரும்பாக்கம் கூட்டு ரோட்டில் சென்ற போது காரில் இருந்து அமுதவள்ளியின் 2 மகள்களும் கீழே குதித்தனர்.

அதன்பின் சிறிது நேரம் சென்று காரை நிறுத்திய 2 வாலிபர்களும் அமுதவள்ளியிடம் இருந்த 20 பவுன் நகையை பறித்துவிட்டு அவரை கீழே இறங்கிவிட்டு தப்பி விட்டனர்.

இது குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசில் அமுத வள்ளி புகார் செய்தனர். போலீசார் வாடகை கார் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இதில் நகை பறிப்பில் ஈடுபட்டது சென்னை பழவந்தாங்கலை சேர்ந்த அய்யனார், பெங்களூரை சேர்ந்த தர்‌ஷன் எனபது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். நகை-காரை பறிமுதல் செய்தனர்.

Similar News