திருப்பத்தூர் தொழிலதிபர் கொலை கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கைது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த மொளகரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). தொழிலதிபர். இவரை, கடந்த 11-ந் தேதி இரவு கிருஷ்ணகிரி மெயின் ரோடு ரெயில்வே மேம்பாலம் வேலன் நகர் அருகே 4 பேர் கும்பல் வெட்டிக்கொலை செய்தது.
கொலையுண்ட வெங்கடேசன், இருமத்தூர் உள்ள தனியார் பள்ளி பங்கு தாரராக இருந்தார். அந்த பள்ளியின் தாளாளராக இருந்த அன்பு கொலையில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட வெங்கடேசன், சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
எனவே, அன்பு கொலைக்கு பழிக்கு பழியாக வெங்கடேசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேக்கிறார்கள். இது சம்பந்தமாக, அன்புவின் மகன்கள் ஆகாஷ், அஜயை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், வெங்கடேசன் கொலையில் திருப்பத்தூர் அவ்வை நகரை சேர்ந்த பிரபல ரவுடி ராஜன் (30) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ரவுடி ராஜனின் கூட்டாளி நவீனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, நவீன் கொடுத்த தகவலின் பேரில், பெங்களூரில் பதுங்கி இருந்த மற்றொரு கூட்டாளியான பாபுவை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். கந்திலி போலீஸ் நிலையத்துக்கு பாபு அழைத்து வரப்பட்டார்.
இதற்கிடையே, ரவுடி ராஜனின் மற்ற கூட்டாளிகளையும் போலீசார் நெருங்கினர். ரவுடியின் கூட்டாளிகள் மேலும் 3 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
பணம் வாங்கி கொண்டு கொலை செய்ததாக இதுவரை பிடிப்பட்ட 5 பேரும் தெரிவித்துள்ளனர். போலீசார் அவர்களை கைதுசெய்தனர்.
இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சதாசிவம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் பிடிப்பட்டால் கொலைக்கான காரணம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளிவரும் என போலீசார் தெரிவித்தனர்.