செய்திகள்

கூடுதல் வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணுக்கு கொலை மிரட்டல்: 5 பேர் மீது வழக்கு- 2 பேர் கைது

Published On 2017-03-01 16:27 IST   |   Update On 2017-03-01 16:27:00 IST
கூடுதல் வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர்.

சிவகங்கை:

சிவகங்கை தாலுகா புதுப்பட்டியைச் சேர்ந்தவர் அர்ச்சனா (வயது 23). இவர், சிவகங்கை நகர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், எனக்கும், சோமசுந்தரம் என்பவருக்கும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அப்போது சீர்வரிசைகள் வழங்கப்பட்டன.

இந்த சூழலில் சிங்கப்பூரில் வேலை பார்க்கும் கணவர் சோமசுந்தரம், அவரது தாய் அழகம்மாள், தந்தை பரமானந்தம், சகோதரர் நித்யானந்தம், அவரது மனைவி சோபியா ஆகியோர் எனது பெற்றோரிடம் கூடுதலாக ரூ. 6 லட்சம் வாங்கி வரும்படி கூறினர்.

சம்பவத்தன்று நான் வீட்டில் இருந்து நடந்து சென்றபோது, ஒரு கார் என்மீது மோதுவது போல் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய கணவர் உள்பட 5 பேரும், பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி, சோமசுந்தரம் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் பரமானந்தம், நித்யானந்தம் கைது செய்யப்பட்டனர்.

Similar News