தேவகோட்டை அருகே மணல் கடத்திய 2 பேர் கைது டிப்பர் லாரி பறிமுதல்
கல்லல்:
தேவகோட்டை அருகே விறுசுழி ஆறு மற்றும் மணிமுத்தாறுகள் உள்ளன. இந்த ஆறுகளின் குறுக்கே ஆன்ரி வயல் என்ற பகுதியில் அணை கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப்பணியை தொடர்ந்து சிலர் அப்பகுதியில் மணல் அள்ளி வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அணை கட்டும் ஒப்பந்ததாரர் “பணி நடக்கும் பகுதியில் யாரும் மணல் அள்ளக்கூடாது” என கூறினார்.
ஆனாலும் இதையும் மீறி மணல் அள்ளப்பட்டு வந்தது. நேற்று விடிய விடிய சிலர் டிப்பர் லாரி, டிராக்டர் மூலம் மணலை அள்ளிச் சென்ற வண்ணம் இருந்தனர். இன்று அதிகாலை 4 மணி அளவில் அந்த வழியாக பொதுமக்கள் சென்றபோது மணல் அள்ளுவதை பார்த்தனர். இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது 2 பேர் டிப்பர் லாரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த ரமேஷ் (வயது 36), திண்டுக்கல் மாவட்டம் அழகு சமுத்திர பட்டியைச் சேர்ந்த கருப்பன் (38) என தெரியவந்தது.
அவர்களை போலீசார் கைது செய்து டிப்பர் லாரி, மற்றும் மணல் அள்ளும் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.