செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மதுரையில் சீமான் தொடர் போராட்டம்

Published On 2017-01-19 03:59 GMT   |   Update On 2017-01-19 03:59 GMT
மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு அமர்ந்து, சீமான் தனியாக இரவு 9 மணி முதல் தொடர் போராட்டத்தை தொடங்கினார்.
மதுரை:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் வலுத்து வருகிறது. மதுரையில் நேற்று நடந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகவும் கோ‌ஷங்களை முழங்கினார்கள்.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசி, போராட்டக்காரர்களுக்கு ஆதரவை தெரிவித்தார். அப்போது அவரை நோக்கி தண்ணீர் பாக்கெட் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு அமர்ந்து, சீமான் தனியாக இரவு 9 மணி முதல் தொடர் போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்தது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர் போராட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியினருக்கு இன்று காலை, அப்பகுதி பொதுமக்கள் டீ, வடை வழங்கினார்கள்.

போராட்டம் குறித்து சீமான் கூறுகையில், ஜல்லிக்கட்டுக்காக நாளை (20-ந் தேதி) வரை மதுரையில் தங்கி இருந்து போராடுவேன். மத்திய-மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் 21-ந் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்துவேன் என்றார்.

Similar News