பயிர் கருகியதால் மேலும் 3 விவசாயிகள் பலி
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருப்பூண்டி அருகே காரைநகர் பகுதியை சேர்ந்தவர் வைரப்பன் (வயது58). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் சம்பா நேரடி நெல் விதைப்பு செய்திருந்தார். சாகுபடி செய்திருந்த பயிர்கள் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கருகின. இந்த நிலையில் தினம் வைரப்பன் தனது வயலுக்கு சென்றார். பின்னர் கருகி இருந்த பயிர்களை பார்த்து மனவேதனையுடன், சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் வடவேற்குடி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் (80). விவசாயி. இவருக்கு வடவேற்குடி பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தில் சம்பா நேரடி நெல் விதைப்பு செய்து இருந்தார். இந்த நிலையில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி கருகியதால் மனவேதனையுடன் காணப்பட்டார். இந்த நிலையில் வயலுக்கு சென்ற வடிவேல் திடீரென வயலிலேயே மயங்கி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, வீட்டுக்கு கொண்டு வந்தனர். பின்னர் வடிவேல் மாரடைப்பால் இறந்தார். இறந்துபோன வடிவேலுக்கு லதா என்ற மகளும், சிவக்குமார், இளையராஜா, சதீஷ்குமார் என்ற 3 மகன்களும் உள்ளனர்.
நாகை மாவட்டம் கீழையூர் கிழக்கு கடற்கரை சாலை நாடார் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம் (47). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் சாகுபடி செய்திருந்த பயிர்கள் முற்றிலும் கருகி போனது. இதனால் தனது நிலத்தில் மாட்டை மேய விட்டார். விளை நிலத்தில் மாடுகளை மேயவிடும் நிலை ஏற்பட்டுள்ளதை நினைத்து அவர் மனவேதனையுடன் காணப்பட்டார். பின்னர் வீட்டிற்கு வந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கீழையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த வெங்கடாசலத்திற்கு அமுதா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.