செய்திகள்

ஜெயலலிதாவின் அரசியல் வெற்றிடத்தை ரஜினியால் மட்டுமே நிரப்ப முடியும்: திருச்சி மாவட்ட நிர்வாகி பேட்டி

Published On 2017-01-02 18:07 IST   |   Update On 2017-01-02 18:07:00 IST
ஜெயலலிதா மரணத்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகி உள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்ப ரஜினியால் மட்டுமே முடியும் என்று திருச்சி மாவட்ட நிர்வாகி கூறினார்.

திருச்சி:

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று சென்னை, திருச்சி உள்பட பல்வேறு நகரங்களில் பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட தலைமை ரஜினி மன்ற அமைப்பாளர் ராயல் ராஜூ ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்தால் தமிழக அரசியலில் மிகப் பெரிய வெற்றிடம் உருவாகி உள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்ப ரஜினியால் மட்டுமே முடியும்.

நடுநிலையாளர்கள், பல்வேறு அரசியல் கட்சியில் இருப்பவர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள், ஆட்டோ டிரைவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளனர். ரஜினி அரசியலுக்கு வர இதுவே சரியான நேரம்.

தமிழகத்தில் புரையோடிய நிலையில் இருக்கும் லஞ்சம், வன்முறையால் ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. ரஜினி அரசியலுக்கு வந்தால் லஞ்சமும், வன்முறையும் முற்றிலுமாக ஒழிக்கப்படும். மக்கள் செழிப்பாக இருப்பார்கள்.

மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்தே 1996-ம் ஆண்டு ஆட்சிக்கு எதிராக ரஜினி குரல் கொடுத்தார். அதேபோல் தற்போதும் அவர் குரல் கொடுப்பதோடு மட்டுமின்றி நேரடியாக அரசியலுக்கு வரவேண்டும். இனியும் பல்லக்கு தூக்க வேண்டாம், பல்லக்கில் நாம் ஏறவேண்டும்.

வாய்ப்பு தானாக வராது, நாம் தான் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ரஜினியின் வாக்கிற்கு ஏற்ப உடனடியாக ரஜினி தனது முடிவை அறிவிக்க வேண்டும்.

விரைவில் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து ரஜினி மன்ற நிர்வாகிகளும் ரஜினியை சென்னையில் நேரில் சந்தித்து எங்கள் நியாயமான கோரிக்கையை தெரிவிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News