வைத்தீஸ்வரன் கோவிலில் ஒரு வழிப்பாதை அமைக்க கலெக்டர் ஆய்வு
சீர்காழி:
சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாதசுவாமி கோவிலில் தையல் நாயகி அம்மன், செல்வமுத்துக்குமரசுவாமி, அங்காரகன்(செவ்வாய்), தன்வந்திரி ஆகிய சுவாமிகள் தனி சன்னதிகளோடு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து ஏராளமானோர் வந்து சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.
வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் சாலைகள் குறுகலாகவும், அதிக வளைவுகளை கொண்டிருப்பதால் அடிக்கடி வாகன விபத்துகளால் உயிரிழப்புகளும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் ஒருவழி பாதை அமைத்துத்தரவேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நாகைமாவட்ட கலெக்டர் பழனிச்சாமி, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வைத்தீஸ்வரன்கோவில் பகுதியிலுள்ள நெடுஞ்சாலைகளை பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
பின்னர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வைத்தீஸ்வரன்கோவில் கீழவீதி இரட்டைபிள்ளையார் கோவிலிலிருந்து வைத்தீஸ்வரன்கோவில் பேருந்து நிலையம் வரை சுமார் 650 மீட்டர் நீளம் உள்ள ஒருவழிபாதை அமைப்பதற்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் ஒருவழிபாதை அமைக்கப்படுவதற்கான இடம் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமாக இருப்பதால் அவரிடம் அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மேற்கண்ட இடத்தில் ஒருவழிபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஆய்வின்போது தாசில்தார் மலர்விழி, வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி செயல்அலுவலர் பாரதிதாசன், கிராம நிர்வாக அலுவலர் நவநீதன், பேரூராட்சி எழுத்தர் நடராஜன், பணியாளர் சுப்பிரமணியன், மற்றும் பலர் உடனிருந்தனர்.