கிராமங்களுக்கு ஏரிகளில் போர்வெல் அமைத்து குடிநீர் விநியோகம்: கலெக்டர் ஆய்வு
சீர்காழி:
சீர்காழி அருகே பழமையான ஏரிகளான திருவாலி மற்றும் பெருந்தோட்டம் ஏரிகளில் போர்வெல் அமைத்து தண்ணீர் தட்டுப்பாடு உள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவது குறித்து கலெக்டர் பழனிசாமி கள ஆய்வு மேற்கொண்டார்.
சீர்காழி அருகே கடற்கரையோர கிராமங்களான பெருந்தோட்டம், தென்னாம்பட்டினம், மார்த்தான்பட்டிணம், கீழமூவர்க்கரை, மேல மூவர்க்கரை,கோணயாம் பட்டினம், திருவாலி, திருநகரி,நெப்பத்தூர் போன்ற பல்வேறு கிராமங்களில் நிலத்தடிநீர் முற்றிலுமாக தரம் மாறி காவிநீராகவும்,உப்புநீராகவும் மாறிவிட்டது.
இதனால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இன்றி கிராமமக்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டது.கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் மேற்கண்ட சில கிராமங்களில் ஆழ்குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டாலும் அது மக்களின் தேவையை பூர்த்தி செய்யவில்லையென கூறப்படுகிறது.
நல்லதண்ணீர் கிடைக்க வழியின்றி பொதுமக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயரும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. மேற்கண்ட கடற்கரையோர கிராமங்களில் குடிநீர் பிரச்சனை வெகுவாக தலைதூக்க தொடங்கியது.இதனை சீர் செய்யக்கோரி மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி திருவாலி, பெருந்தோட்டம் ஏரிகளில் பார்வையிட்டு கள ஆய்வுசெய்தார். 115 ஏக்கர் பரப்பளவுக்கொண்ட பெருந் தோட்டம் ஏரியிலிருந்து அப்பகுதியை சுற்றியுள்ள குடிநீர் தட்டுப்பாடு உள்ள கிராமங்களான கோணயாம்பட்டினம், மார்த்தான்பட்டினம், தென்னாம்பட்டினம் ஆகிய கிராமங்களுக்கு மேற்படி பெருந்தோட்டம் ஏரியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதிலிருந்து கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குறித்தும், அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்தார்.
அதனைத்தொடர்ந்து 180 ஏக்கர் பரப்பளவுக்கொண்ட திருவாலி ஏரி அதனை சுற்றியுள்ள கிராமங்களான திருவாலி, நெப்பத்தூர், திருநகரி ஆகிய பகுதிகளுக்கு திருவாலி ஏரியிலேயே போர்வெல் அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறை வழங்கினார். ஆய்வின்போது மாவட்ட திட்ட அலுவலர் சங்கர், சீர்காழி தாசில்தார் மலர்விழி, ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.