செய்திகள்

58 வயது ஆனவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்க வேண்டும்: பென்சனர்கள் வலியுறுத்தல்

Published On 2016-12-20 16:08 IST   |   Update On 2016-12-20 16:08:00 IST
புறநகர் பேருந்துகளில் 58 வயது ஆனவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்க வேண்டும் என்று பென்சனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் கிளை அகிலபாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் தினவிழா ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு வட்ட தலைவர் சிவசிதம்பரம் தலைமை வகித்தார். வட்ட பொருளாளர் ஸ்டாலின், ராயர், ராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் சிதம்பரம் தீர்மானங்களை விளக்கி பேசினார். விழாவில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் 80 வயது முடிந்த உறுப்பினர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி பேசினார்.

வட்ட செயலாளர் ராம மூர்த்தி அறிக்கை வாசித்தார். துணைசெயலாளர் பீட்டர், செயலாளர் ராமசாமி, துணை செயலர் பாஷ்யம், துணைத்தலைவர் ராமையன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மருந்துகள் மற்றும் மருத்துவக் கட்டணம் விலை ஏற்றத்தால் நிரந்தர மாத மருத்துவப்படி ரூ.2500-க்கு குறையாமல் வழங்கவேண்டும். சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் காப்பீட்டு கழகம் அனுமதித்ததுக்கு கூடுதலாக தொகை வசூலிப்பதை நிறுத்தவேண்டும்.

மத்திய அரசைபோல் 20 ஆண்டு பணிக்கு முழு பென்சனும், குறைந்தபட்ச பென்சன் தொகையாக ரூ.3500 வழங்கவேண்டும். கேரள மாநிலத்தைப் போல் மாத கடைசி நாளுக்கு பதிலாக முதல்நாளே பென்சன் வழங்கவேண்டும். தேர்தல் வாக்குறுதிபடி பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தவும், புறநகர் பேருந்துகளில் 58 வயது ஆனவர்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகைகள் வழங்க வேண்டும்.

சமுதாயத்தை சீர்திருத்தும் வகையில் மது, புகையிலை, மசாலாபாக்கு ஆகியவற்றை அகற்ற விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளவேண்டும். ஜெயங்கொண்டத்தில் திருச்சிரோடு, பஸ்ஸ்டாண்டு ரோடு ஆகியவற்றை ஒருவழி சாலையாக மாற்றவேண்டும். நான்குரோட்டில் ரவுண்டானாவும், பேருந்து நிலையத்தில் உள்ள வாகன காப்பகத்திற்கு மேற்கூரை அமைத்து தரவேண்டும். நகராட்சிக்குட்பட்ட ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவேண்டும்.

சிதம்பரம், அரியலூர், கும்பகோணம், விருத்தாசலம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் ரயில்பாதை அமைக்க வேண்டும். டாஸ்மாக்கை அரசு கைவிடவேண்டும் உள்ளிட்ட பலதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வீராசாமி, சிவகுருநாதன், மணிமேகலை மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக துணைத்தலைவர் ராமசாமி வரவேற்றார். முடிவில் வட்ட பொருளாளர் சுந்தரேசன் நன்றி கூறினார்.

Similar News