செய்திகள்

திருமானூர் அருகே விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை-காலாவதியான பொருட்கள் பறிமுதல்

Published On 2016-12-18 23:34 IST   |   Update On 2016-12-18 23:34:00 IST
திருமானூர் அருகே கடைகளில் வைத்திருந்த புகையிலை-காலாவதியான பொருட்களை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருமானூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே திருமழபாடி பகுதியில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து அரியலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் உத்தரவின் படி திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் மணிவண்ணன் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் பீடி, சிகரெட், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அவைகளை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கடைஉரிமையாளர் களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் டீக்கடைகளில் தரமான டீத்தூள் பயன்படுத்தப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அங்கு விற்கப்படும் தின்பண்டங்கள் பாதுகாப்புடன் வைக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், கடைகளில் புகைப்பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி , 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் கொடுக்கப்பட மாட்டாது என விளம்பர போர்டுகள் வைக்கப்பட வேண்டும் என சுகாதார துறையினரால் அறிவுறுத்தப்பட்டது. மேலும், பஞ்சர் கடைகளில் உள்ள பழைய டயர்களை அப்புறப்படுத்தி அதில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் தீயிட்டு அழிக்கப்பட்டன. இந்த ஆய்வில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தர்மலிங்கம், சுகாதார ஆய்வாளர் அருள், குமார், ராஜேஸ்வரி மற்றும் காவல் துறையினர் உடனிருந்தனர்.

Similar News