மயிலாடுதுறை அருகே குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு அருகே ஆத்தூர் நடுத்தெருவை சேர்ந்த மணி மகன் சின்னப்பா (வயது 28). அதே பகுதியை சேர்ந்த கோவிந்த சாமி மகன் மாணிக்கம் (36). மயிலாடுதுறை திருமஞ்சன வீதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கில்லி பிரகாஷ் என்கிற பிரகாஷ் (31).
இவர்கள் 3 பேரும், கடந்த மாதம் (நவம்பர்) மணல்மேடு அருகே ஆத்தூரை சேர்ந்த பிரபல ரவுடி மனோகரன் என்பவரை படுகொலை செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை பரிந்துரையின் பேரில் சின்னப்பா, மாணிக்கம், பிரகாஷ் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் பழனிசாமி உத்தரவிட்டார். அதன்பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய சின்னப்பா, மாணிக்கம், பிரகாஷ் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.