சீர்காழி பகுதியில் பட்டாசு விழுந்து வீடுகளில் தீ விபத்து: ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்
சீர்காழி:
சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் மீனவர் காலணியை சேர்ந்தவர் வீரப்பிள்ளை. இவரது வீட்டில் நேற்று பட்டாசு விழுந்து தீப்பிடித்தது. இதில் வீட்டில் இருந்து டி.வி.உள்பட ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சீர்காழி தீயணைப்பு நிலைய அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் அணைத்தனர்.
இதேபோல் சீர்காழி கீழத்தெருவைச் சேர்ந்த தவமணியின் கூரைவீடு, சீர்காழி மேல மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தேவேந்திரன், அன்பழகன் ஆகியோரின் கூரைவீடு ஆகியவற்றில் பட்டாசு விழுந்து ரூ 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. மேலும் புதுத்துறையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் வீடு, மாதிரவேலுரை சேர்ந்த ராஜா என்பவரின் வைக்கோல் போர் ஆகியவற்றில் பட்டாசு விழுந்து ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.
மணல்மேடு குறிச்சியை சேர்ந்த தங்க பிரகாசம், தர்மராஜன் ஆகியோரின் வீட்டில் மின்கசிவு காரணமாக நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
சீர்காழி பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இதையொட்டி சீர்காழி தீயணைப்பு நிலையம் மூலம் 2 தீயணைப்பு வாகனம் தயாராக வைக்கப்பட்டு தீயணைக்கப்பட்டது.
தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் சீர்காழி கீழத்தெருவில் உள்ள தவமணி என்பவர் வீட்டிற்கு சென்று சீர்காழி பாரதி எம்.எல்.ஏ. நிவாரண உதவி பொருட்கள் வழங்கினார்.