திட்டச்சேரி அருகே தென்னை மரத்தின் மீது கார் மோதி வாலிபர் பலி
நாகப்பட்டினம்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அய்யம்பேட்டை நேரு நகர் வடக்கு பகுதியை சேர்ந்தவர் குத்புதீன். இவருடைய மகன் அப்துல்ரசீது (வயது30). இவரும் அய்யம்பேட்டை தானிஸ்நகரை சேர்ந்த முகமது அலி மகன் அபுதாஹிர், அய்யம்பேட்டையை சேர்ந்த ஜெகப்அலி மகன் அன்சாரி, அகமது இஸ்மாயில் மகன் உஸ்மான், முகமது இலியாஸ் மகன் யாசர்அராபத் ஆகிய 5 பேரும் அய்யம்பேட்டையில் இருந்து காரில் நாகை மாவட்டம் நாகூருக்கு சென்றனர்.
காரை தஞ்சை எஸ்.பி. நகரை சேர்ந்த தங்கையா என்கிற சாகுல்அமீது ஓட்டியுள்ளார். கார் நேற்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் திட்டச்சேரியை அடுத்த வாழாமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த தென்னை மரத்தில் மோதியது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது.
இந்த விபத்தில் காரில் சென்ற 6 பேரும் படுகாயம் அடைந்து காருக்குள் சிக்கிக்கொண்டனர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து திருமருகல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய பொறுப்பாளர் மூர்த்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி காரில் இருந்து 6 பேரையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அப்துல்ரசீதை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த அன்சாரி, அபுதாஹிர், உஸ்மான், யாசர்அராபத், டிரைவர் தங்கையன் ஆகிய 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.