செய்திகள்

தரங்கம்பாடி பகுதியில் மழைவெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: கலெக்டர் ஆய்வு

Published On 2016-10-19 17:15 IST   |   Update On 2016-10-19 17:15:00 IST
நாகை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் பாதிப்புக்குள்ளாகாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் பழனிசாமி ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட அகரதனுர், முத்தூர், கொடவிளாகம், பெரம்பூர், எடக்குடி, அகரவல்லம், இளையாளு, கடக்கம் ஆகிய கிராமங்களில் வடகிழக்குப் பருவமழையால் பாதிப்புக்குள்ளாகாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் பழனிசாமி ஆய்வு செய்தார்.

இந்த பகுதியில் அதிக மழை பெய்யும் போது, வாய்க்கால்களில் வடிகால்கள் இல்லாததால் மழைநீர் தேங்கி விடுகிறது. மழைநீர் அதிகமாக தேங்கும் தாழ்வான பகுதிகளிலிருந்து நீர் விரைவாக வடியும் வகையில் வாய்க்கால்களில் வடிகால்கள் சரி செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இப்பகுதி குளங்கள் மற்றும் கண்மாய்கள் தூர்வாரப்பட்டு தேங்கும் மழைநீர் ஊருக்குள் புகாத வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்குவதைத் தவிர்க்கும் வகையில் பிரதான சாலைகளுக்கும், குடியிருப்புப் பகுதிகளுக்கும் இடையே உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்படும். அதிகமாக மழை பொழியும் காலங்களில், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரினை வெளியேற்றுவதற்கும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கும், மழை வெள்ளத்தினால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர மாவட்ட நிர்வாகத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது தாசில்தார் இளங்கோவன், நீர்வள ஆதாரம் (பாசனப்பிரிவு) உதவி செயற்பொறியாளர் பாட்ஷா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

Similar News