செய்திகள்

குத்தாலம் அருகே இளம்பெண் மர்ம மரணம்: தந்தை போலீசில் புகார்

Published On 2016-10-19 16:02 IST   |   Update On 2016-10-19 16:02:00 IST
குத்தாலம் அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

குத்தாலம்:

நாகை மாவட்டம் மணல்மேடு அருகே நடுத்திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது60). இவரது மகள் துர்கா தேவிக்கும் (வயது27), குத்தாலம் அருகே சென்னியநல்லுர் ஊராட்சி கச்சார் கிராமத்தை சேர்ந்த கண்ணையன் மகன் கார்த்தி(30) என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது.

கார்த்தி சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் நிலஅளவையராக பணிபுரிகிறார். துர்கா தேவிக்கு இம்மாதம் 11-ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. 16-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவரை கார்த்தி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு சென்னைக்கு சென்று விட்டார்.

இந் நிலையில் துர்கா தேவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டதாக கார்த்தி குடும்பத்தினரிடமிருந்து ரெங்கசாமிக்கு தகவல் வந்துள்ளது.

இதுகுறித்து ரெங்கசாமி தனது மகளின் திடீர் மரணத்தில் மர்மம் இருப்பதாக குத்தாலம் போலீசில் புகார் செய்துள்ளார். திருமணம் ஆகி ஒருவருடமே ஆகியுள்ளதால் ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Similar News