செய்திகள்

2-வது நாளாக ரெயில் மறியல்: ரெயில் தண்டவாளத்தில் படுத்து முத்தரசன் விடிய விடிய போராட்டம்

Published On 2016-10-18 05:27 GMT   |   Update On 2016-10-18 05:27 GMT
திருவாரூர் அருகே உள்ள கொடிக்கால்பாளையத்தில் இ.கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நேற்று காலை 6 மணிமுதல் இன்று காலை வரை விடியவிடிய போராட்டம் நடைபெற்றது.

சீர்காழி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்க கூட்டியக்கம் சார்பில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இன்று 2-வது நாளாக ரெயில் மறியல் நடந்தது.

திருவாரூர் அருகே உள்ள கொடிக்கால்பாளையத்தில் இ.கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நேற்று காலை 6 மணிமுதல் இன்று காலை வரை விடியவிடிய போராட்டம் நடைபெற்றது.

பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும், விவசாய சங்கத்தினரும் திரளாக கலந்து கொண்டனர். 1000 பெண்கள் உள்பட 2000-க்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

அங்கேயே சமையல் செய்யப்பட்டு உணவு வழங்கப்பட்டது. சிலபெண்கள் கை குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். அவர்கள் டெல்டா மாவட்டத்தில் விவசாயம் அழிந்து விட்டதாக கூறி ஒப்பாரி போராட்டமும் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட முத்தரசன் இரவு தண்டவாளம் அருகே படுத்து தூங்கினார்.

இன்று காலை திருவாரூர் ரெயில் நிலையத்தில் முத்தரசன் தலைமையில் போராட்டம் தொடர்ந்து நடந்தது. ரெயில் தண்டவாளத்தில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சீர்காழி முதல் பனமங்கலம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து இருந்தனர்.

இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது. அவர்கள் தீப்பந்தங்களை ஏந்தியும், டயர்களை எரித்தும், ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று 2-வது நாளாக விவசாயிகள் தண்டவாளத் தில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சன்னா நல்லூரில் விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தனர்.

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் சென்ற பயணிகள் ரெயிலை மறித்தனர். விவசாயிகள் விடிய, விடிய அங்கு போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணிகள் ரெயிலை இயக்க முடியவில்லை. அங்கு தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இன்று காலையும் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்தது. எனவே இன்று ரெயிலை இயக்க முடிய வில்லை.

Similar News