செய்திகள்

அந்தியூர் அருகே கர்நாடகா லாரிக்கு தீ வைத்த 4 பேர் கைது

Published On 2016-10-06 12:04 IST   |   Update On 2016-10-06 12:04:00 IST
அந்தியூர் அருகே கர்நாடகா லாரிக்கு தீ வைத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பெருமாள்பாளையத்தை சேர்ந்த சித்தேஸ்வரன், சிவமூர்த்தி ஆகிய இருவரையும் தேடி வருகிறார்கள்.
அந்தியூர்:

கர்நாடகா மாநிலம் கொள்ளாகால் மாவட்டம் ராமபுரத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன். லாரி உரிமையாளர்.

இவருக்கு சொந்தமான லாரியில் வாடகைக்கு டிரைவரை அமர்த்தி கடந்த மாதம் கர்நாடகாவில் இருந்து பெருந்துறைக்கு மக்காசோளம் ஏற்றி இறக்கி விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தது.

ஆப்பக்கூடல் நால்ரோடு வந்த போது காவிரி பிரச்சனை காரணமாக பதற்றமான சூழ்நிலை இருந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் லாரியை டிரைவர் சாலை ஓரமாக நிறுத்தி விட்டு மாதேஸ்வரனுக்கு தகவல் தெரிவித்தார்.

மாதேஸ்வரன் அங்கு விரைந்து வந்தார். பின்னர் டிரைவரை அனுப்பி விட்டு அன்று இரவு தானே லாரியை ஓட்டி கொண்டு சென்றார். பர்கூர் மலை பகுதி வழியாக கர்நாடகா செல்ல திட்டமிட்டு அந்தயூர் கெட்டிசமுத்திரம் ஏரி அருகே லாரியுடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு மர்ம கும்பல் தாங்கள் கொண்டு வந்த பெட்ரோலை லாரி சீட்டில் ஊற்றி தீ வைத்தனர். இதை அணைக்க முயன்ற மாதேஸ்வரனுக்கு தீ காயம் ஏற்பட்டது. பின்னர் பொதுமக்களும், போலீசும் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.

இது தொடர்பாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் உத்தரவின் பேரில் பவானி துணை கண்காணிப்பாளர் ஜானகிராமன் மேற்பார்வையில் பவானி இன்ஸ்பெக்டர் இளங்கோவன், அந்தியூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர விசாரணையில் அந்தியூர் கொல்லபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பெரியார்நகரை சேர்ந்த லோகநாதன், பூனாச்சி பகுதியை சேர்ந்த கோகுல், நஞ்சமடைகுட்டை பகுதியை சேர்ந்த மணி என்கிற குப்புசாமி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் பெருமாள் பாளையத்தை சேர்ந்த சித்தேஸ்வரன், சிவமூர்த்தி ஆகிய இருவரையும் தேடி வருகிறார்கள்.

Similar News