செய்திகள்

மின்னல் தாக்கி படகு சேதம்: கடலில் தத்தளித்த 8 மீனவர்கள் மீட்பு

Published On 2016-10-01 17:06 IST   |   Update On 2016-10-01 17:06:00 IST
நாகையில் மின்னல் தாக்கியதில் படகில் இருந்த மீனவர்கள் கரைக்கு செல்ல முடியாமல் நடுக்கடலில் தத்தளித்தனர்.

சீர்காழி:

நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே பழையாறு அண்ணாநகர் தெருவை சேர்ந்தவர் நேரு (வயது 48). இவருக்கு சொந்தமான விசை படகில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த செல்வம் (26), மணிகண்டன் (20), காமராஜ் (28), சுமன் (25), ஏலமுத்து (26), சங்கர் (35), சுரேஷ் (28), பொன்னுசாமி (50) ஆகிய 8 பேரும் பழையாறு துறைமுகத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க புறப்பட்டனர்.

பின்னர் மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி படகில் இருந்த திசைக்காட்டும் கருவி, ஏக்கோ சிலிண்டர் (கடலில் மீன்கள் இருக்கும் இடத்தை காட்டும் கருவி), வாக்கிடாக்கி, மின்சாரம் தேக்கி வைக்கும் எந்திரம் உள்ளிட்ட கருவிகள் மட்டும் சேதம் அடைந்தன. இதனால் மீனவர்கள் 8 பேரும் எந்த பாதிப்பும் இல்லாமல் படகிலேயே இருந்தனர். ஆனால், மின்னல் தாக்கியதில் படகில் இருந்த சாதனங்கள் அனைத்தும் சேதம் அடைந்ததால் மீனவர்களால் மேற்கொண்டு படகை இயக்க முடியவில்லை.

இதனால் படகில் இருந்த மீனவர்கள் கரைக்கு செல்ல முடியாமல் நடுக்கடலில் தத்தளித்தனர். இந்த நிலையில் மீனவர் பொன்னுசாமியிடம் இருந்த செல்போன் மட்டும் இயங்கியது. அதன் மூலம் மீனவர்கள், படகு உரிமையாளர் நேருவை தொடர்பு கொண்டு மின்னல் தாக்கியதால் படகை இயக்கமுடியாமல் நடுக்கடலில் தத்தளிப்பதாகவும், உடனே வந்து காப்பாற்றும் படியும் கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பழையாறு பகுதி மீனவர்கள் விசை படகுகள் மூலம் கடலுக்கு விரைந்து சென்று நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

மீட்கப்பட்ட சேதமடைந்த படகை பாரதி எம்.எல்.ஏ. பார்வையிட்டார். பின்னர் மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

Similar News