செய்திகள்

ஈரோட்டில் ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 14 பவுன் நகை பறிப்பு

Published On 2016-09-05 16:22 IST   |   Update On 2016-09-05 16:23:00 IST
ஈரோடு மாவட்டத்தில் ரெயிலில் பயணித்த ஓய்வு பெற்ற அரசு பெண் ஊழியரிடம் இருந்து 14 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு:

ஈரோட்டை சேர்ந்தவர் ஏசுரத்தினமணி (வய62). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி ஸ்டெல்லா சுமதி (59). ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.

இவர்கள் நேற்று கோவையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரெயிலில் புறப்பட்டனர். கோவை வந்த அவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் பயணிகள் ரெயில் மூலம் மாலை ஈரோட்டுக்கு புறப்பட்டனர்.

ரெயில் திருப்பூரை கடந்து பெருந்துறை அடுத்த ஈங்கூர் ரெயில் நிலையத்தில் நின்றது. ஸ்டெல்லா சுமதி ஜன்னல் அருகே அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில் ரெயில் புறப்பட தயாரானது.

அப்போது பிளாட்பாரத்தில் நின்ற வாலிபர் ஜன்னல் அருகே ஓடிவந்து ஸ்டெல்லா சுமதி கழுத்தில் அணிந்திருந்த 14½ பவுன் நகையை பறித்தான். அதிர்ச்சியடைந்த ஸ்டெல்லா சுமதி திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். அப்போது ரெயில் புறப்பட்டது.

சுதாரித்துக்கொண்ட பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். உடனே ரெயில் நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பெண்ணிடம் நகைப்பறிக்கப்பட்டது தெரிய வந்தது.

கொள்ளையனை போலீசாரும், பயணிகளும் தேடினர். புதர் நிறைந்த பகுதியில் மறைந்து கொள்ளையன் தப்பியிருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து ஸ்டெல்லா இன்று காலை திருப்பூர் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

Similar News