சிவகங்கை மாவட்ட ரேசன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு திட்டம் குறித்து உயர் அதிகாரி ஆய்வுக்கூட்டம்
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலும், மாவட்ட கலெக்டர் மலர்விழி முன்னிலையிலும் பொது விநியோக திட்டம் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வில் பொது விநியோகத் திட்டம் தொடர்பாக முழுக்கணினி மயமாக்கல் அனைத்து பொருட்கள் பற்றி ஆணையரால் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் விற்பனை எந்திரம் பொருத்தப்பட்டது தொடர்பான பணி முன்னேற்ற விவரம் பற்றி விவாதிக்கப்பட்டது. வரும் செப்டம்பர் முதல் ஆணையர் அலுவலகம் மூலம் அனைத்து கடை களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுவது மற்றும் பொதுமக்களிடம் ஆதார் எண் சேகரிப்பது மற்றும் அலைபேசி எண் கட்டாயம் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஜனவரி 2017-ம் ஆண்டு முதல் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளதால் ஆதார் எண் வழங்கிட வேண்டும் என்பதை பொது மக்களுக்கு வலியுறுத்தி அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது. ஸ்மார்ட் கார்டு திட்டம் பொதுமக்கள் வசதிக்காகவே ஏற்படுத்தப்படுகிறது. எனவே, இப் பணிக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், தனி வட்டாட்சியர்கள் (கு.பொ), வட்ட வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவு சார் பதிவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.