செய்திகள்

அறந்தாங்கி அருகே கோவில் திருவிழாவில் கோஷ்டிமோதல்: பெட்ரோல் குண்டு வீச்சு 14 பேர் காயம்

Published On 2016-08-24 14:05 GMT   |   Update On 2016-08-24 14:05 GMT
அறந்தாங்கி அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பயங்கர மோதலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. 14 பேர் காயம் அடைந்தனர்.

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பாண்டிபத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று (23-ந்தேதி) காவடி எடுப்பு மற்றும் அம்மன் வீதியுலா நடைபெற்றது. அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமன் வீட்டு அருகில் வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர் செட்டில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ராமன் மற்றும் அருகில் உள்ள வீடுகளில் வசிப்போர் சிலர் கோவிலுக்கு சென்று அங்கிருந்த நிர்வாகிகளிடம், பிள்ளைகள் பாடம் படிப்பதால் குறைந்த சத்தத்தில் பாடல் ஒலிபரப்புமாறு கூறியுள்ளனர்.

இதற்கு அவர்கள் மறுக்கவே நியாயம் கேட்டு சென்றவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை அதே பகுதியை சேர்ந்த அண்ணாத்துரை (வயது 40) தட்டி கோட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ராமர் மற்றும் அவரது தரப்பினர் சேர்ந்து அண்ணாதுரை, வினோத் (19), ரகுராம்ராஜன் (37), ஆனந்த் (23), மணிமாறன் (28), சுப்பிரமணி (45) ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கி உள்ளனர்.

இதில் அவர்கள் அனைவரும் படுகாயம் அடைந்தனர். இதேபோல் அண்ணாதுரை தரப்பை சேர்ந்தவர்கள் ராமர் (49), அவரது மனைவி முத்து (42), பாரதி (21), மெய்யப்பன், சுப்பையா, பெருமாள், ஜெய ராஜ் ஆகியயோரை தாக்கி உள்ளனர். இதனால் அந்த இடமே கோஷ்டி மோதலால் போர்க்களம்போல காட்சி அளித்தது.

இதில் படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் அண்ணாதுரை மட்டும் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே திருவிழா காண வந்திருந்த அறந்தாங்கியை அடுத்த பிராந்தனி பகுதியை சேர்ந்த வீரையன் மகள் ஆனந்த்குமார் திடீரென பெட்ரோல் குண்டை கோவில் வளாகத்தில் வீசினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த குண்டு வெடிக்க வில்லை. இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பு கூடியது.

உடனடியாக போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மற்றொரு பெட்ரேல் குண்டையும் பறிமுதல் செய்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் விரைந்து வந்து மோதலை தடுத்து கட்டுக்குள் கொண்டு வந்தார். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் அறந்தாங்கி டி.எஸ்.பி. செல்லபாண்டியன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் சம்பவம் தொடர்பாக நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News