காரைக்குடியில் ஓடும் பஸ்சில் மாணவியிடம் செல்போன் அபேஸ்: என்ஜினீயரிங் பட்டதாரி கைது
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரை சேர்ந்தவர் அழகர் (வயது63). இவரது பேத்தி நமீதா (20) என்ஜினீயரிங் கல்லூரி மாணவி.
இவர் தனது தாத்தாவுடன் பஸ்சில் காரைக்குடிக்கு சென்றார். பஸ் நிலையத்தில் இறங்கிய நமீதா தனது கைப்பை திறந்து கிடப்பதை பார்த்தார். அதன் உள்ளே இருந்த விலை உயர்ந்த செல்போன் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பஸ்சில் தனது பின்னால் இருந்த வாலிபர் மீது சந்தேகம் அடைந்தார்.
அந்த வாலிபரும் அங்கே நிற்க அவரை பிடித்து சக பயணிகள் சோதனை செய்தனர். அப்போது நமீதாவின் செல்போனை அவர் அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அழகப்பாபுரம் போலீசில் அவர் ஒப் படைக்கப்பட்டார்.
சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தார். விசாரணையில் அவரது பெயர் தமிழ்வாணன் (31) என்பதும் பள்ளத்தூர் வடசேரியை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி என்பதும் தெரியவந்தது.