செய்திகள்

ரஜினிகாந்த் நடிப்பதால் தமிழ் படங்களுக்கு பெருமை நடிகர் பாக்யராஜ் ருசிகர பேச்சு

Published On 2016-08-12 15:24 IST   |   Update On 2016-08-12 15:24:00 IST
‘கபாலி பார்க்க வெளிநாட்டு காரங்க பிளைட்டுல வர்ராங்க..’ ரஜினிகாந்த் நடிப்பதால் தமிழ் படங்களுக்கு பெருமை என்று நடிகர் பாக்யராஜ் கூறினார்.

ஈரோடு:

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் புத்தகத் திருவிழா நடந்து வருகிறது. நேற்று இரவு நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் நடிகரும் டைரக்டருமான பாக்யராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அவர் ‘‘சுத்தி வரப்பாரு கத்துக்கலாம் நூறு’’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அப்போது பாக்யராஜ் கூறியதாவது:-

இங்கே வலது புறம் அமர்ந்துள்ள கவர்ச்சி புயல் ‌ஷகிலா அவர்களே.. இடது புறம் அமர்ந்துள்ள கவர்ச்சி தென்றல் நமீதா அவர்களே.. இந்த வார்த்தையை வேறு எந்த விழாவில் நான் கூறினாலும் ‘‘எங்கே ‌ஷகிலா.. நமீதா..’’ என்று கூட்டத்தில் இருப்பவர்கள் எட்டி பார்ப்பார்கள். எழுந்து பார்ப்பார்கள்.

ஆனால் இங்க கூடி இருக்கும் கூட்டம் எட்டிக் கூட பார்க்காமல் எவ்வித சலனமும் இல்லாமல் அப்படியே இருக்கிறீர்கள். ஏனெனில் ஒரு கவர்ச்சி நடிகையை கூட்டிக்கிட்டு வந்தால்தான் அங்கு கூட்டம் கூடும் என்பார்கள்.

ஆனால் ஒரு புத்தக விழாவுக்கு இவ்வளவு கூட்டமா...? என்று பார்க்கும் போது வெள்ளாங் கோவிலை சேர்ந்த எனக்கு பெருமையாக இருக்கிறது. அந்த வெள்ளாங்கோவில் உள்ள ஈரோடு மாவட்டத்துக்கும் பெருமையாக இருக்கிறது.

ரசிகர்களின் மத்தியில் ‘கபாலி’ படத்தின் தாக்கத்தை பற்றி எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எனக்கு முன் பேசினார். அதிகாலை 6 மணிக்கெல்லாம் ஷோ நடத்தி கபாலி பார்க்கிறார்கள் என்று கூறினார். நள்ளிரவிலும் ஷோ நடந்தது அவருக்கு தெரியாது. இப்படி கபாலி படத்தின் தாக்கத்தை பற்றி கூறி கொஞ்சம் வருத்தத்துடன் ‘‘மகிழ்ச்சி’’ என்று முடித்தார்.

நான் கூட சில நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது ‘‘மகிழ்ச்சி’’ என்று ஆரம்பித்தேன். அப்போது பலத்த கரவொலி எழுந்தது. தமிழ்நாட்டில் பரவாயில்லை ஆந்திராவில் நடிகரை கடவுளாக பார்க்கிறார்கள். கர்நாடகாவில் இதை விட நடிகர்கள் மீது மூர்க்கத்தனமான மோகம். ஆனால் தமிழ் நாட்டில் ரசிகர்களாக இருந்து ரசிக்கத்தான் செய்கிறார்கள்.

இன்னைக்கு அந்த மனு‌ஷன் (ரஜினிகாந்த்) படத்தை பார்க்க மலேசியா, ஜப்பான், அமெரிக்காவிலிருந்து கூட பிளைட்டில் பறந்து வருகிறார்கள். ரஜினிகாந்த் தமிழ் படத்தில் நடிப்பதால் அவரால் தமிழ் படங்களுக்கு பெருமை.

சினிமா என்பதை நிஜமாக இங்கே பேசிய நாஞ்சில் நாடன் கூறி உள்ளார். அவர் நிஜம் என கருதி விட்டார். அது நிஜம் அல்ல ‘நிழல்’ என்பதை உணர வேண்டும்.

நான் சிறுவனாக இருந்த போது வெள்ளாங்கோவில் பள்ளியில் படித்தேன். அப்போது என் அமமா எனக்கு தினமும் காலணா கொடுப்பார். அப்போது வெள்ளாங்கோவிலில் கோபால் கடையும், கோனார் கடையும் இருந்தது. நான் அந்த கோனார் கடையில் சீரக மிட்டாய் வாங்கி சாப்பிடுவேன். ஒரு நாள் அம்மா வெளியே சென்று விட்டார். நான் வீட்டில் இருந்த துட்டை எடுத்து கோனார் கடையில் கொடுத்து சீரகம் மிட்டாய் வாங்கி சாப்பிட்டேன். அன்று சாய்ந்தரம் கோனார் எங்க வீட்டுக்கு வந்தார். அம்மாவுக்கு தெரியாமல் காலணா எடுத்து வந்ததை அம்மாவிடம் போட்டு கொடுத்திருப்பாரோ என்று எண்ணினேன்.

ஆனால் நான் எடுத்து கொடுத்தது காலணா காசு அல்ல அது தங்க காசு என அப்புறம் எனக்கு தெரிந்தது. அதை அம்மாவிடம் கொடுக்கத்தான் அவர் வந்துள்ளார். அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத அந்த கோனாரின் பெருமை எனக்கு அப்போது தெரிய வில்லை. பெரியவன் ஆன பிறகு அவரது பெருமையை தெரிந்து ஆச்சரியப் பட்டேன்.

பள்ளிக்கூடத்தில் நான் அவ்வளவாக படிக்க மாட்டேன். ஆனால் நான் சினிமாவில் நுழைந்து சாதித்தது ஆசிரியர்கள்தான் காரணம். எனவேதான் நான் நடித்த பல படங்களில் ஆசிரியர்களின் பெயர்களை வைத்தேன். சினிமா துறைக்கு வந்த பிறகுதான் புத்தகங்களின் அருமையை உணர்ந்தேன். இப்பமெல்லாம் நிறைய படிக்கிறேன். நம் வாழ்வை உயர்த்துவது புத்தகங்கள்தான்.

இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

முன்னதாக ‘‘சொல் எனும் சொல்’’ என்ற தலைப்பில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசினார். நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகன் தலைமை தாங்கினார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்று நன்றி கூறினார்.

Similar News