செய்திகள்
கல்வி கடனை தனியார் வசூல் செய்வதை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
கல்வி கடனை தனியார் வசூல் செய்வதை கண்டித்து தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் ஈரோடு ஜவான் பவன் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு:
கல்வி கடனை தனியார் வசூல் செய்வதை கண்டித்து தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் ஈரோடு ஜவான் பவன் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னாள் எம்.எல்.ஏ விடியல் சேகர் தொடங்கி வைத்தார்.
மாநில துணை தலைவர் ஆறுமுகம், மாவட்ட தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கல்வி கடனை தமிழக அரசே ஏற்று கொள். வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு வேலை கொடு, கல்வி கடனை தனியார் மயமாக்காதே என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சந்திர சேகர்,மாநில வர்த்தக அணி செயலாளர் சரவணகுமார், நெசவாளர் அணி செயலாளர் ராஜேஷ் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.