செய்திகள்

சீர்காழியில் குப்பை மேடாக மாறி வரும் சட்டைநாதர் குளம்

Published On 2016-07-20 17:26 IST   |   Update On 2016-07-20 17:26:00 IST
சீர்காழியில் சட்டைநாதர் குளம் சுற்றுசுவர் இடிந்தும், குப்பைகள் கொட்டப்பட்டும் பராமரிப்புகள் இன்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

சீர்காழி:

சீர்காழி ஈசானியத் தெருவில் உள்ள சட்டைநாதர் குளம் சுற்றுசுவர் இடிந்தும், குப்பைகள் கொட்டப்பட்டும் பராமரிப்புகள் இன்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

சீர்காழி நகரில் மட்டும் கரிக்குளம், தாமரைக்குளம், ஆரியாப்பிள்ளைகுளம், தென்பாதிகுளம் மற்றும் கோவில்களில் உள்ள குளங்கள் என சுமார் 11க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்களால்தான் சீர்காழி நகரில் நிலத்தடி நீர் அதிகரித்துவந்தது. ஆனால் காலப்போக்கில் குளங்கள் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு குளத்தின் பரப்பளவு குறைந்து காய்ந்த குட்டையாக மாறிவிட்டன.

இதேபோல் சீர்காழி ஈசானியத்தெருவில் சட்டைநாதர் குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் ஈசானியத்தெரு, காமராஜர்அவென்யூ, வடபாதி மாரியம்மன் கோவில் தெரு, கோவிந்த ராஜன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் நீர் ஆதாரமாக இருந்துவந்தது.

இந்த குளத்தில் சாலையோரம் பாதுகாப்பு கருதி நகராட்சி சார்பில் சுற்றுசுவர் கட்டப்பட்டு சில மாதங்களிலேயே 50அடி தூரத்திற்கு சுவர் குளத்தினுள்ளேயே இடிந்து விழுந்தது. அதனை இதுவரை நகராட்சி நிர்வாகம் சீரமைக்கவில்லை. மேலும் குப்பைகள் கொட்டப்படுவதாலும் குளம் மாசு அடைந்து வருகிறது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு சட்டைநாதர் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News