திருப்பத்தூர் அருகே பெண் அடித்து கொலை: 2 பெண்கள் கைது
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருஉடையார்பட்டியை சேர்ந்தவர் பேரின்பம். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது45). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பேரின்பம் வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்றுவிட சீதாலட்சுமி குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
சீதாலட்சுமிக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜகண்ணன் மனைவி ரேவதிக்கும் (35) தண்ணீர் பிடிப்பதில் பிரச்சினை இருந்து வந்தது. நேற்றும் இவர்களுக்கிடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ரேவதியும், அவரது மாமியார் வள்ளியும் சீதாலட்சுமியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்தவர்கள் சண்டையை விலக்கி விட்டனர்.
இந்நிலையில் 2 பேரும் தாக்கியதில் சீதாலட்சுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சீதாலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் விசாரணை நடத்தி கொலை வழக்காக பதிவு செய்து ரேவதி, வள்ளி ஆகியோரை கைது செய்தார்.