செய்திகள்

தாம்பரம் அருகே ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்து வந்த 2 பெண்களிடம் நகை பறிப்பு

Published On 2016-07-10 14:26 IST   |   Update On 2016-07-10 14:26:00 IST
தாம்பரம் அருகே ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்து நடந்து வந்த 2 பெண்களிடம் நகை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம்:

சென்னையில் ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்து வரும் பெண்களை குறி வைத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

பட்டினப்பாக்கத்தில் நந்தினி என்ற ஆசிரியை ஏ.டி.எம்.-ல் ரூ.20 ஆயிரம் சம்பள பணத்தை எடுத்து வரும்போது கொள்ளையனால் பணம் பறிக்கப்பட்டது. அப்போது கொள்ளையனை துரத்தி சென்று பிடிக்க முயன்ற நந்தினி கீழே விழுந்து பலியானார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தாம்பரம் அருகே 2 இடங்களில் ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்து வந்த பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு :-

பீர்க்கங்கரணை தங்க ராஜ்நகர் சோனியாகாந்தி தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி சுஜாதாகிறிஸ்டி. 2 பேரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள்.

இருவரும் நேற்றிரவு 8.30 மணிக்கு அங்குள்ள ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்து விட்டு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் நடந்து வந்த ஒரு வாலிபர் 500 ரூபாய்க்கு சில்லரை கேட்டான். இவர்கள் இல்லை என்று சொன்னதும் சுஜாதா கிறிஸ்டி கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்கநகையை அவன் பறித்துக்கொண்டு ஓடினான். இவர்கள் திருடன்... திருடன்.. என்று கூச்சல் போட்டனர்.

ஆனால் அதற்குள் சற்று தள்ளி நின்று கொண்டிருந்த கூட்டாளியின் மோட்டார் சைக்கிளில் கொள்ளையன் ஏறி தப்பிச் சென்று விட்டான்.

நகையை பறிகொடுத்த சுஜாதா கிறிஸ்டி பீர்க்கங்கரனை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் சத்தியா (வயது 21). தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். நேற்றிரவு 9 மணி அளவில் சேலையூரில் உள்ள ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்து விட்டு நடந்து சென்றார்.

அப்போது கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் அவரது பர்சை பறித்தார். ஆனால் சத்தியாவிடம் இருந்து பர்சை தட்டிப்பறிக்க முடியவில்லை. இதனால் அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 1 பவுன் நகையை பறித்துக்கொண்டு ஓடினான்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த திருடனை விரட்டி பிடித்து சேலையூர் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பிடிபட்டவன் பெயர் ஜெயக்குமார் என்றும், கிழக்கு தாம்பரத்தை சேர்ந்தவன் என்றும் தெரிய வந்தது. போலீசார் அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News