செய்திகள்

காதலித்த போலீஸ்காரர் கைவிட்டதால் பெண் போலீஸ் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

Published On 2016-07-10 12:46 IST   |   Update On 2016-07-10 12:46:00 IST
பரங்கிமலையில் காதலித்த போலீஸ்காரர் கைவிட்டதால் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலந்தூர்:

சேலத்தைச் சேர்ந்த மெர்சி ஈஸ்வரி (வயது24). சென்னை பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். நந்தம்பாக்கம் கலைஞர் நகரில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வருகிறார்.

அதே ஆயுதப்படையில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச்சேர்ந்த மாலிக்பாஷா (25) போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.

போலீஸ்காரர் மாலிக் பாஷாவும், பெண் போலீஸ் மெர்சி ஈஸ்வரியும் கடந்த 3 வருடமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் மாலிக்பாஷா, மெர்சி ஈஸ்வரியை திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புகார் செய்வதற்காக மெர்சி ஈஸ்வரி சில பெண்களுடன் சேர்ந்து நேற்று மாலை பரங்கிமலை மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். போலீசில் புகார் தெரிவித்து விட்டு வெளியே வந்த அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அவர் வி‌ஷம் குடித்ததால் மயங்கி விழுந்ததாக தெரிகிறது.

அவரை பரங்கிமலை பெண் போலீசார் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மெர்சி ஈஸ்வரியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரே இடத்தில் வேலை பார்த்ததால் நானும் போலீஸ்காரர் மாலிக்பாஷாவும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இருவருமே நெருங்கிப் பழகினோம். இருவரும் கணவன்-மனைவி போல ஒன்றாக வாழ்ந்தோம். இதனால் இருமுறை நான் கருக்கலைப்பு செய்துள்ளேன்.

என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாலிக்பாஷாவிடம் வற்புறுத்தினேன். அவர் அதற்கு மறுத்து விட்டார்.

கடந்த 5-ந்தேதி அவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றார். அங்கு வேறு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக அறிந்தேன். அந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும். மாலிக்பாஷாவை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெண் போலீஸ் மெர்சி ஈஸ்வரி 1 வருடத்துக்கு முன்பு பள்ளிக்கரணையில் உள்ள ஒரு பள்ளியில் பாதுகாப்பு பணிக்கு சென்றார். அப்போது எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயன்றார்.

இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது மாலிக் பாஷா என்னை திருமணம் செய்ய மறுத்ததால் எலி மருந்து தின்றதாக மெர்சி ஈஸ்வரி தெரிவித்தார். மாலிக் பாஷாவை அழைத்து இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார்.

அப்போது அவர் மெர்சி ஈஸ்வரியை நான் காதலிக்கவில்லை. என் மீது பொய்யான புகார் கொடுத்துள்ளார். புகார் உண்மையாக இருந்தால் என் மேல் நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.

இதையடுத்து மெர்சி ஈஸ்வரியை இன்ஸ்பெக்டர் சமாதானம் செய்தார்.

அதன் பிறகு மெர்சிஈஸ்வரி சென்னை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு வந்து மாலிக் பாஷா மீது புகார் செய்தார். மெர்சி ஈஸ்வரி நந்தம்பாக்கம் கலைஞர் நகரில் வசிப்பதால் நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யுமாறு கூறி போலீசார் அனுப்பினர்.

இதையடுத்து 4 மாதத்துக்கு முன்பு அவர் நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு சென்று மாலிக்பாஷா மீது புகார் செய்தார். போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பினர்.

மாலிக்பாஷா மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் மெர்சிஈஸ்வரி நேற்று பெண்களுடன் சென்று பரங்கிமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

Similar News