செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் அனுமதியின்றி ஊர்வலம்: இந்து முன்னணியினர் 80 பேர் கைது

Published On 2016-06-27 19:30 IST   |   Update On 2016-06-27 19:31:00 IST
ஜெயங்கொண்டத்தில் அனுமதியின்றி ஊர்வலம் சென்ற இந்து முன்னணி கட்சியினர் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கீழமாளிகை, ஆர்.எஸ்.மாத்தூர் கிராமத்தில் கிறிஸ்தவ மதபோதகர்கள் முகாமிட்டு அந்த பகுதியில் உள்ள இந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தியதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் இந்து முன்னணி கட்சியினர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் போலீசாரை கண்டித்து இந்து முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக கூறி இந்து முன்னணி கட்சியினர் போலீசாரிடம் அனுமதி பெற்றனர்.

இதையடுத்து நேற்று இந்து முன்னணி கட்சியினர் மாவட்ட செயலாளர் ராஜசேகர் தலைமையில் ஜெயங்கொண்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில பொறுப்பாளர் ராஜகுருபாண்டியன், ஒன்றியச்செயலாளர் சரத்குமார், ஒன்றியத்தலைவர்கள் கண்ணாமணி, மணிகண்டன், பழனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக இந்து முன்னணியினர் போலீசாரை கண்டித்து ஊர்வலம் சென்றனர். ஆனால் அவர்கள் ஊர்வலத்துக்கு அனுமதி பெற வில்லை. இதனையறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் முத்துக்கருப்பன், ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அனுமதியின்றி ஊர்வலமாக சென்ற 80 பேரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News