செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே கள்ளக்காதலியை எரித்துக் கொன்ற லாரி டிரைவர் கைது

Published On 2016-06-24 16:42 IST   |   Update On 2016-06-24 16:42:00 IST
ஜெயங்கொண்டம் அருகே கள்ளக்காதலியை எரித்துக்கொன்ற வழக்கில் லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலணிகுழி கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி அம்பிகா (வயது 35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 11-4-2016 அன்று வீட்டை விட்டு சென்ற அம்பிகா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து ரவிமீன்சுருட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பிகா எங்கு சென்றார் என்று விசாரணை நடத்தி அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் லாட்டூர் பகுதியில் உள்ள கருவேலங்தோப்புக்குள் அம்பிகா தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து லாட்டூர் போலீசார் மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரை கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அம்பிகா வீட்டருகே வசித்து வந்த லாரி டிரைவர் கலிய பெருமாள் (29) என்பவர் அம்பிகாவை எரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அம்பிகாவை கலியபெருமாள் கொலை செய்ததற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:-

கலியபெருமாளுக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தால் கிராமம். மேலும் அவர் அம்பிகாவின் கணவர் ரவிக்கு உறவினர் ஆவார். இந்நிலையில் ஜெயங்கொண்டத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்த கலியபெருமாள், ரவி உறவினர் என்பதால் அவரது வீட்டு அருகே ஒருவீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார். அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு லாரிகளை ஓட்டி வந்தார்.

மேலும் ரவி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். இதனால் அம்பிகாவிற்கும், கலியபெருமாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.

இதனிடையே கலியபெருமாளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். இதையறிந்த அம்பிகா, கடந்த 11-4-2016 அன்று கலியபெருமாளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நான் உன் மேல் உயிர் வைத்திருக்கிறேன். நீ என்னுடன் தான் வாழ வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு கலியபெருமாள் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. மேலும் நான் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு லாரியில் லோடு ஏற்றி செல்கிறேன். அங்கு சென்றுவிட்டு வந்த பிறகு நான் உன்னிடம் பேசுகிறேன் என்று கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அம்பிகா, மீண்டும் கலியபெருமாளை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நான் உன்னை இப்போதே பார்க்க வேண்டும் என்று கூறினார். அப்போது கலியபெருமாள் நான் சேலத்தில் நிற்கிறேன் என்று கூறவே, உடனே அம்பிகா அங்கு சென்றார். பின்னர் அவரை மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அழைத்து சென்ற கலியபெருமாள், லாட்டூர் பகுதியில் உள்ள கருவேலந்தோப்புக்கு அழைத்து சென்று எரித்து கொலை செய்துள்ளார். அம்பிகாவின் சிம்கார்டு மூலம் போலீசார் விசாரணை நடத்தி கலியபெருமாளை கைது செய்து விட்டனர்.

Similar News