செய்திகள்

செந்துறை அருகே தரமற்ற தார்சாலை அமைப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டம்

Published On 2016-06-22 19:19 IST   |   Update On 2016-06-22 19:19:00 IST
செந்துறை அருகே தரமற்ற தார்சாலை அமைப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
செந்துறை:

செந்துறை, அருகே உள்ள மணப்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணப்பத்தூர் முதல் படைவெட்டிக்குடிக்காடு வரை 4 கிலோ மீட்டர் மண் சாலையை தார்சாலையாக மாற்ற கடந்த ஆண்டு ஒப்பந்தம் கோரப்பட்டது. அதன்படி, ரூ.93 லட்சத்திற்கு டெண்டர் எடுத்து வேலைகள் நடைபெற்று வந்தது.

முதலில் கிராவல் மற்றும் செம்மண் மூலம் சாலை அமைக்கப்பட்டு அதன் மேல் தார்ச்சாலை அமைக்கும் பணி கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த சாலை தரமற்றதாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், தார்சாலை அமைப்பதில் தரம் இல்லை எனவும், குறிப்பிட்ட அளவுக்கும் கீழ் சாலையின் உயரம் இருப்பதாகவும், கையால் பெயர்த்து எடுக்கும் அளவுக்கு மிகவும் தரமற்றதாக இருப்பதாகவும் கூறிய பொதுமக்கள், இயந்திரத்தால் தரமானதாக போடப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதனையறிந்த செந்துறை ஒன்றிய பொறியாளர் குமார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை தரமாக இயந்திரத்தால் போடப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News