அரியலூர் மாவட்டத்தில் பள்ளி கட்டடங்கள் கட்டுமான பணி: கலெக்டர் ஆய்வு
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், வெள்ளுர் அரசு உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் பள்ளி புதிய கட்டடப் பணிகளை மாவட்ட கலெக்டர் எ.சரவண வேல்ராஜ் பார்வையிட்டு கட்டுமான பணிகளை உரிய காலத்திற்குள் விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :–
தமிழக முதல்வர் கல்விக்காக மொத்த வரவு செலவுத்திட்டத்தில் 6–ல் ஒரு பகுதியை கல்விக்காக ஆண்டுதோறும் ஒதுக்கீடுசெய்து, விலையில்லா பாடப்புத்தகம், மிதிவண்டி, மடிக்கணினி, சீருடை என பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து, தேர்ச்சிலும், மதிப்பெண் விழிக்காட்டிலும் மற்ற மாநிலங்களை காட்டிலும் முதன்மை மாநிலமாக கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளையும், தேவையான அளவிற்கு உரிய காலத்தில் நிறைவேற்றி வருகிறார்கள்.
இந்நிலையில், அனைவருக்கும் இடை நிலைக்கல்வித் திட்டம் மூலமாக 2010–11ம் ஆண்டில் தாமரைக்குளம் மற்றும் சாத்தம்பாடி ஆகிய இரண்டு பள்ளிகளும், 2011–12ம் ஆண்டில் வாரணவாசி, வெள்ளுர், ரெட்டிப்பாளையம், தென்கச்சிபெருமாள் நத்தம், கொல்லாபுரம், நாகம்பந்தல், உல்லியக்குடி மற்றும் தூத்தூர் ஆகிய 8 பள்ளிகளும், உயர் நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதில் தூத்தூர் உயர்நிலைப் பள்ளிக்கு இடம் தேர்வு நிலையில் உள்ளது.
இப்பள்ளியை தவிர மற்ற பள்ளிகளுக்கு 2015–16 ஆம் கல்வியாண்டில் ஒரு பள்ளிக்கு ரூ.168.81 இலட்சம் வீதம் தாமரைக்குளம் மற்றும் சாத்தம்பாடி இரண்டுப் பள்ளிகளுக்கு ரூ.337.62 இலட்சம் நிதி ஒதுக்கீடும், மீதமுள்ள எட்டுப் பள்ளிகளுக்கு ரூ.144 இலட்சம் நிதியை முதல் தவணையாக நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பொதுப்பணித் துறையின் மூலமாக 10 பள்ளிகளுக்கான புதிய கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகிறது. இப்பணிகளில் வெள்ளுரில் நடைபெற்றுவரும் புதிய பள்ளி கட்டடப் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து கட்டுமான பணிகளும் உரிய காலத்திற்குள் விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டிலேயே புதிய கட்டடங்கள் பயன் பாட்டிற்கு விடப்படும் என மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் தெரிவித்தார்.
ஆய்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.