செய்திகள்

தேர்தலுக்கு முன்பு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள்

Published On 2016-06-07 17:40 IST   |   Update On 2016-06-07 17:40:00 IST
கடலூர் மாவட்டத்தில் தேர்தலுக்கு முன்பு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடலூர்:

தமிழகம் முழுவதும் தற்போது புழக்கத்தில் இருக்கும் ரேஷன் கார்டுகளுக்கு பதில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் அதற்கான ஆயத்த பணிகளை சில மாவட்டங்களில் தமிழக அரசு தொடங்கியது. சட்டசபை தேர்தல் காரணமாக அந்த பணிகள் நிறுத்தப்பட்டன.

தேர்தல் முடிந்து விட்டதால் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக முதல் கட்டமாக திருச்சி, அரியலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிநவீன கருவியை தமிழக அரசு அறிமுகப்படுத்தி அதில் ரேஷன் அட்டைதாரர்கள் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரி கூறியதாவது:–

கடலூர் மாவட்டத்தில் தற்போது அரிசி மற்றும் சர்க்கரை கார்டுகள் என மொத்தம் 7 லட்சத்து 3 ஆயிரத்து 536 ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை மாதந்தோறும் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும்போது மேலும் அதிகரிக்கும்.

இந்த நிலையில் போலி ரேஷன் கார்டுகள் பிடி படும்போது ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை குறையும்.

தேர்தலுக்கு முன்பு புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி முடிவடைந்து ஒரு வார காலத்துக்குள் அவை வினியோகிக்கப்படும்.

இனி ரேஷன் கார்டு தேவைப்படுவோர் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்காக இ–சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம்.

புதிய ரேஷன் கார்டு கேட்டு தாலுகா அலுவலகங்களில் விண்ணப்ப படிவத்தை கொடுத்தாலும் அவற்றை சரிபார்த்து பின்னர் இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது.

கடலூர் மட்டுமின்றி விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை ஆகஸ்டில் தொடங்க வாய்ப்புகள் உள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கும் போது வாங்காத பொருட்கள் பற்றிய விவரம் செல்போன் மூலம் சம்பந்தப்பட்ட நபருக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதனால் முறைகேடுகள் தவிர்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News