செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி பஸ்கள் ஆய்வு: மாவட்ட வருவாய் அலுவலர் மேற்பார்வையில் நடந்தது

Published On 2016-05-22 20:04 IST   |   Update On 2016-05-22 20:04:00 IST
அரியலூர் மாவட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவீந்திரன் மேற்பார்வையில் பள்ளி பஸ்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடைவிடுமுறையின் போது பள்ளி பஸ்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்ட பள்ளி பஸ்கள் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இம்மாவட்டத்தில் 146 பள்ளி பஸ்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 96 பஸ்களை மாவட்ட வருவாய் அலுவலர் ரவீந்திரன் மேற்பார்வையில், வட்டார போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது பள்ளி பஸ்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவி பொருத்தப்பட்டு இருக்கிறதா? அவசரகால வழிகள் சீராக உள்ளனவா? பஸ்களின் படிக்கட்டுகள் மாணவ-மாணவிகள் ஏறி செல்வதற்கு வசதியாக இருக்கின்றனவா? முதல் உதவி சிகிச்சை பெட்டிகள் இருக்கிறதா என்பது உள்ளிட்ட கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டன.

இதில் 23 பஸ்களில், முதல் உதவி சிகிச்சை பெட்டி இல்லாதிருத்தல், வேகக்கட்டுப்பாட்டு கருவி குறித்த வாசகம் எழுதாதிருத்தல் உள்ளிட்ட சிறு, சிறு வாகன விதிமுறை குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என டிரைவர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த பஸ்களின் குறைகளை சரி செய்து மீண்டும் சில நாட்களுக்குள் ஆய்வுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் டிரைவர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் மீதமுள்ள பஸ்கள் ஒர்க்ஸாப்பில் வேலைக்காக விடப்பட்டிருப்பதாலும், ஏனைய சில காரணங்களாலும் ஆய்வுக்கு வரவில்லை. இதனால் அந்த பஸ்கள் வருகிற 30-ந் தேதிக்குள் வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. வருகிற ஜூன் மாதம் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு கருதி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி பஸ்கள் ஆய்வு செய்யப்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.  

Similar News