வாழப்பாடி அருகே அரசு பஸ், லாரி மோதல்: டிரைவர் பலி
வாழப்பாடி:
சென்னையில் இருந்து சேலத்திற்கு நேற்றிரவு அரசு விரைவு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 53 பயணிகள் பயணம் செய்தனர். அரூரை சேர்ந்த பிரபாகரன் (35) பஸ்சை ஓட்டி வந்தார்.
பஸ் இன்று அதிகாலை 5 மணியளவில் சேலம் மாவட்டம் வாழப்படியை அடுத்த புதுப்பாளையம் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்ற லாரி பஸ் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் லாரியை ஓட்டி சென்ற சேலம் மாவட்டம் பெரமனூர் பகுதியை சேர்ந்த ராஜா (39) இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் அரசு பஸ் டிரைவர் அரூரை சேர்ந்த பிரபாகரன் (35) மற்றும் பயணிகள் 4 பேரும் படுகாயம் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற நெடுஞ்சாலை ரோந்து மற்றும் வாழப்பாடி போலீசார் காயமடைந்த 5 பேரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தால் அந்த சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாழப்பாடி மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கிரேன் உதவியுடன் 2 வாக னங்களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர்.