செய்திகள்

திருவண்ணாமலையில் இடி-மின்னலுடன் பலத்த மழை: மின்னல் தாக்கி 2 மாடு பலி

Published On 2016-05-07 10:59 IST   |   Update On 2016-05-07 10:59:00 IST
திருவண்ணாமலையில் இடி-மின்னலுடன் பெய்த பலத்த மழையில் மின்னல் தாக்கி 2 மாடு பலியானது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வழக்கமாக வேலூர்தான் வெயிலில் முன்னிலையில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு சில நாட்களாக திருவண்ணாமலை மாவட்டம் வெயிலில் வேலூரை முந்திவிட்டது.

கடந்த 4-ந் தேதி கத்திரி வெயில் தொடங்கியதில் இருந்து 108 டிகிரி வரை வெயில் பதிவாகி உள்ளது. இதனால் மழை பெய்தால்தான் வெயிலில் இருந்து தப்பிக்க முடியும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர். நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று 103 டிகிரி வெயில் பதிவானது.

இந்த நிலையில் மாலை 5-30 மணிக்கு திருவண்ணாமலை பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பலத்த காற்றும் வீசியது. தொடர்ந்து லேசாக மழை பெய்தது. பின்னர் கீழ்பென்னாத்தூர், சோமாசிப்பாடி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது. இதனால் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழையின்போது திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகில் இருந்த ஒரு தென்னை மரத்தில் மின்னல் தாக்கியது. இதில் தென்னை மரம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

அதேபோன்று திருவண்ணாமலை அடுத்த தென்அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன் (வயது 60) என்பவர் நேற்று மாலை நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்ருந்தார். அப்போது பசுமாட்டின் மீது மின்னல் தாக்கியது. இதில் மாடு சம்பவ இடத்திலேயே பலியானது. அதன் அருகில் நின்ற பச்சையப்பனுக்கு 2 கால்களிலும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வந்தவாசி நகரில் நேற்று மாலை 4-20 மணிக்கு திடீரென மேகங்கள் சூழ்ந்த நிலையில் இடி, மின்னலுடன் காற்று வீசியது. இதை தொடர்ந்து மாலை 5 மணியளவில் தொடங்கிய லேசான மழை 5-20 மணி வரை பெய்தது. இதனால் நகரில் குளிர்ந்த காற்று வீசியது.

வந்தவாசியை அடுத்த செம்பூர் கிராமத்தில் குப்பன் என்பவரின் மனைவி சரஸ்வதி (வயது 50) அருகில் உள்ள வயல்வெளியில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது பசுமாட்டின் மீது மின்னல் தாக்கியதில் மாடு சம்பவ இடத்திலேயே பலியானது. இதில் படுகாயம் அடைந்த சரஸ்வதி சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.

வேலூர் மற்றும் மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று கோடை மழை பரவலாக பெய்தது.

Similar News